மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
மும்பை பகுதிக்கு ஆண்டுதோறும் ஜூன் 10-ஆம் தேதி பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதே போல ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே மும்பையில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மும்பையின் பல பகுதிகளில் பெய்த கன மழையால் நகரமே ஸ்தம்பித்துள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மழையால் மும்பை மாநகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வரை மும்பை பகுதியில் பெய்த மழை அளவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோலாபோ பகுதியில் 90 மி.மீ. மழையும், சன்டாக்ரூஷ் பகுதியில் 195 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.