இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ளார் ஆப்ரிக்க கண்டத்தின் செஷல்ஸ் நாட்டு அதிபர் டேனி ஃபௌர்.
அவருக்கு புது டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர், முறைப்படி அரசு மரியாதை கொடுத்தனர். அவர் முதன் முறையாக இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேனி ஃபெளர் மற்றும் மோடி, கார்டு ஆப் ஹானர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, அதில் பங்கெடுத்திருந்த விமானப் படை வீரர் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து, அருகிலிருந்த அவரது சகாக்கள் மயங்கி விழுந்திருந்தவருக்குத் தேவையான முதலுதவி செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், விமானப் படை வீரர் அருகில் வந்த மோடி, அவரின் உடல் நிலை குறித்து விசாரித்தார். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும் மோடி அவருக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து, அங்கிருந்து நகர்ந்து தனது அலுவலகத்துக்கு மோடி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.