மாநிலங்களைவை துணை சபாநாயகருக்கான பதவிக்காலம் நிறைவுற இருப்பதால் புதிய நபரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பாஜக-வை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., சுகேந்து சேகர் ராய் தான் எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளராக இருப்பார் என்று பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை காங்கிரஸும் திரிணாமூல் காங்கிரஸுடன் சேர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரக் ஓப்ரியன், ‘எதிர்கட்சிகளின் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரை நிறுத்துவோம்’ என்று கூறியுள்ளார். ராஜ்யசபாவில் மொத்தம் இருக்கும் 245 இடங்களில் காங்கிரஸுக்கு மட்டும் 51 சீட்கள் இருக்கிறது.
ஆனால், இந்த எண்ணிக்கையை வைத்து மட்டும் பாஜக-வை வெற்றி கொள்ள முடியாது என்பதால், மற்ற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து செயலாற்ற காங்கிரஸ் விருப்பப்படுவதாக தெரிகிறது. கடைசியாக ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி வந்தது 1992-ல் தான்.
அப்போது பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் நேரடியாக போட்டி நடந்தது. காங்கிரஸ் 128 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 95 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்தவுடன், ஜூலை 18 ஆம் தேதி ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கும்.