மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலிருந்து மும்பை முலுண்ட் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு ஓர் இதயம் 1 மணி நேரம் 34 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டது.
ஒரு வாரம் முன்பதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மும்பை முலுண்ட் பகுதியில் நான்கு வயது சிறுமிக்கு இதயம் பொருத்தப்பட வேண்டியது இருந்தது.
அவுரங்காபாத்தில் சாலை விபத்தொன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். அவனது இதயம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அகற்றப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அவுரங்காபாத் விமான நிலையத்திற்கு பிற்பகல் 1:50 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 4.8 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நிமிட நேரத்திற்குள் வாகனம் கடந்தது. அங்கிருந்து தனி விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை மாலை 3:05 மணிக்கு வந்தடைந்தது.
மும்பை விமான நிலையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு மாலை 3:24 மணிக்கு இதயம் வந்து சேர்ந்தது.
மொத்தத்தில் 94 நிமிடங்கள், அதாவது 1 மணி 34 நிமிட நேரத்தில், 323.5 கிலோ மீட்டரை கடந்து கொண்டு வரப்பட்ட இதயத்தை மருத்துவர்கள், 4 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்தச் சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறாள்.