ஸ்விஸ் பணம் விவகாரம்: ராகுலுக்கு ஜெட்லி பதிலடி

by Rahini A, Jun 30, 2018, 19:29 PM IST

தற்காலிக நிதியமைச்சர் பியுஷ் கோயல், ‘இந்தியாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, 2018 ஜனவரி 1 முதல் 2019 மார்ச் 31 ஆம் தேதி வரை, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியாவிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்தின் தரவுகள் சேமிக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் யாராவது சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார். கோயலின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘2014 ஆம் ஆண்டு, அனைத்து கருப்புப் பணத்தையும் எடுத்து வந்து நாட்டில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்றார்.

2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கருப்புப் பணப் பிரச்னையைத் தீர்க்கும் என்றார். 2018 ஆம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து இந்தியர்களின் டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறியவுடன், அவை அனைத்தும் வெள்ளைப் பணம் என்கிறார்’ என்று ட்விட்டர் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது வலைதளத்தில் அருண் ஜெட்லி, ‘ஸ்விட்ரசர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் உள்ள அனைத்துப் பணமும் கருப்புப் பணம் என்று நினைப்பது மிகத் தவறு. வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து விடலாம் என்றிருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி இருந்த நடைமுறையை மாற்ற அந்நாடு பல சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் குடிமகன்களாக இருப்பவர்கள் சட்டபூர்வமாகவும் டெபாசிட் செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில், சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால், அது குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விஷயம் பற்றிய அடிப்படையை புரிந்து கொண்டு கருத்து கூற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

You'r reading ஸ்விஸ் பணம் விவகாரம்: ராகுலுக்கு ஜெட்லி பதிலடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை