சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை இந்திய அளவில் அமல்படுத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக-வினர் பலர், ‘ஜிஎஸ்டி பெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாட்டின் எதிர்கட்சியான காங்கிரஸ் ஜிஎஸ்டி குறித்து கடும் விமர்சனைத்தை முன் வைத்துள்ளது.
ஜிஎஸ்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ், ‘சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தி ஓராண்டு முடிந்துவிட்டது. ஆனால், அது குறித்து என்ன சொல்லப்பட்டதோ அதைச் செய்து காட்டவே இல்லை.
பிரதமர் மோடியின் ‘யு-டர்ன்’ திட்டங்களில் ஜிஎஸ்டி-யும் ஒன்று. புரிதல் இல்லாமலும் குழப்பமானதாகவும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையால் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. ஆனால், இன்னும் இது ஒரு வெற்றித் திட்டம் என்று பிரதமர் கூச்சலிட்டு வருகின்றார்’ என்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடியால் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஒரு தேசம் - ஒரு வரி - ஒரு சந்தை என்ற கோஷத்தை முன் வைத்தே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.
ஆனால், நாட்டின் சிறு மற்றும் குறு தொழில்கள் ஜிஎஸ்டி-யால் மிகவும் நசுக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.