குழந்தை கடத்தல்காரர்கள் என்று கிளம்பிய வதந்தியாலும் அதனால் உண்டான சந்தேகத்தாலும் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, துலே நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பழங்குடியின மக்கள் வாழும் ரெய்ன்பாடா கிராமம். இந்த கிராமத்துக்கு 7 பேர் பேருந்து மூலம் வந்துள்ளனர். அவர்கள் 7 பேரும் கிராமத்திற்கு வேலை தேடி வந்தததாகக் கூறப்படுகிறது.
கிராமத்திலிருந்து சந்தை பகுதிக்குச் சென்ற அவர்கள் அக்கம் பக்கத்தில் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் குழந்தை ஒன்றிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ஊர்காரர் ஒருவர், அவரை குழந்தை கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பலர் அவருடன் சேர்ந்து 7 பேரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் தப்பித்துவிட்டனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த போலீஸ், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது.
பலரை இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளது போலீஸ். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஆண்களாகவே இருக்கின்றனர். கொலை செய்யப்பட்டரவகள் மகாராஷ்டிர மாநிலத்தின் சொலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.