நேபாளத்தில் கன மழை காரணமாக சிக்கித்தவித்து வந்த யாத்திரிகளுள் இருந்த ஒரு தமிழர் தற்போது அப்பேரிடரில் பலியாகி உள்ளார்.
நேபாளத்தில் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலர் கனமழையின் காரணமாக அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று காலை அறிவித்தார்.
கையிலாய யாத்திரை என தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் நேபாளத்தில் உள்ளனர். கடும் மழை காரணமாக நிலச்சரிவு, பனிச்சரிவு என பல அபாயங்களால் மக்கள் அங்கு தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் சார்பில் மீட்புப் படை நேபாளம் விரைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு ஆண்டிப்பட்டியிலிருந்து சென்ற ராமச்சந்திரன் உயிரிழந்துள்ளார். ராமச்சந்திரனின் உடலைக் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் உறுதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஒரு உயிர் பலியாகியுள்ள நேரத்தில் பிரதமர் மோடி, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நலன் குறித்து வெளியுறவுத்துறையிடம் கேட்டறிந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.