தலைநகர் டெல்லியிலும் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக சாலை பிளந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. சப்தர்ஜங் வானியல் ஆய்வகத்தில் காலை எட்டரை மணிவரை 4.6 மிமீ மழைப்பொழிவு பதிவானது. பாலம் ஆய்வகத்தில் 9.3 மிமீ பதிவாகியுள்ளது.
லோதி சாலையில் உள்ள ஆய்வகத்தில் 5.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 32.2 டிகிரி செல்ஷியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை பதிவானதாக சப்தர்ஜங் ஆய்வகம் தெரிவித்துள்ளது. காலையிலேயே மழை பெய்யத் தொடங்கியதால், அலுவலகம் செல்லும் நேரத்தில் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. டெல்லி - நொய்டா சாலையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன.
டெல்லியிலும் நொய்டாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லிப் போக்குவரத்துக் காவல்துறை, வாகன ஓட்டிகளை சில பகுதிகளிலுள்ள சாலைகளைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ளதால் மாயாபூரிலும், பதர்பூர் - மெஹ்ராலி சாலையிலும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான அல்லது மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது.