கிகி சேலஞ்ச் மேற்கொள்பவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நடனம் ஆட நேரிடும் என பெங்களூரு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இளசுகளை பாடாய் படுத்துக் கொண்டிருக்கிறது இந்த கிகி சேலஞ்ச். அது என்ன கிகி சேலன்ஞ் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்.
காரில் சென்றுக் கொண்டிருப்பவர்கள் பாட்டு போட்டதும், ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடியபடி மீண்டும் ஓடும் காரில் ஏறுவது தான். இந்த சேலஞ்சை ஆரம்பித்து வைத்தவர் கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஒருவர். ஆனால், இதன் பயம் அறியாமல் சேலஞ்சை எடுத்துக் கொண்டு நடு ரோட்டில் ஆடுகின்றனர்.
இந்த கிகி சேலஞ்ச் இளைஞர்களிடையே வேகமாக டிரெண்டாகி வருகிறது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யாரையும் கிகி சேலஞ்ச் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் நடிகை ரெஜினா இந்த சேலஞ்சில் பங்கேற்றிருந்தார்.
கிகி சேலஞ்சை ஒரு சிலர் சரியாக செய்யும் அதேநேரத்தில் சிலர் உயிரையே இழக்கும் அபாயமும் நிகழ்கிறது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் இந்த சேலஞ்சை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் பெங்களூரு காவல்துறை, இளைஞர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். கிகி சேலஞ்ச் மேற்கொள்பவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நடனம் ஆட நேரிடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளனர்.