மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து கர்நாடகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை வந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களது உடமைகளை சுங்க அதிகாரிகளும் போலீசாரும் சோதனை செய்தபோது அதில் தமிழக போலீசாரால் தேடும் நபர் பட்டியலில் இருந்த திருமுருகன் காந்தி வந்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக தமிழக போலீசாருக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக போலீசார் திருமுருகன் காந்தியை பிடித்து வைக்குமாறு விமான நிலைய போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து திருமுருகன் காந்தியை பிடித்த கர்நாடகா போலீஸ், அவரை விமானநிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பின்னர் விமான நிலைய டிஜிபி அலுவலகத்திற்கு திருமுருகன் காந்தி அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
மே 17 இயக்கத்தின் சேர்ந்த திருமுருகன் காந்தி கூடங்குளம் அணு உலை எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் மீது தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தனர் இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரது பெயரை தேடும் நபர் பட்டியலில் தமிழக போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். "பாசிச வெறியாட்டம் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டுமென திட்டம்."
"அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூரில் கைது செய்துள்ளனர். இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" வைகோ வலியுறுத்தியுள்ளார்.