எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும், இதன் மூலம் எங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. ஏற்கனவே அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இது போன்ற கூட்டணிகள் அமைக்கப்பட்டது ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளன.” என்றார்.
தொடர்ந்த பேசிய அவர், “இந்த கசப்பான அனுபவங்களை ஏற்கெனவே மக்கள் பெற்று இருக்கிறார்கள். ஆகவே, மோடியை வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்வதை மக்கள் புறக்கணிப்பார்கள்.
எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணி மக்களிடம் எடுபடாது. அந்த கூட்டணி என்பது தோல்வி திட்டம். இதன் மூலம் அவர்கள் மக்களோடு கூட்டணியை ஏற்படுத்த முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களின் கொள்கை வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதாக இருக்கும்.
2014 நாடாளுமன்ற தேர்தலை விட, நாங்கள் எதிர்வரும் தேர்தலில் இன்னும் கூடுதல் இடங்களை கைப்பற்றுவோம். பாஜக கூட்டணியில் இதுவரை பெற்ற இடங்களை விட அதிக இடங்களை பெற்று எங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்” என்று கூறினார்.