கொல்கத்தாவில் பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கில் 50 ஏக்கர் பரப்பில் மேம்பாட்டு மையம் அமைக்க இருப்பதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டப் பணிகளுக்கென 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
2008ம் ஆண்டில் அப்போதைய மேற்கு வங்க முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம் அம்மாநிலத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக இன்போசிஸ் நிறுவனம் கூறி, ராஜார்ஹட் அருகே 50 ஏக்கர் நிலத்தையும் பெற்றிருந்தது. மம்தா பானர்ஜி முதல்வராக பிறகு முந்தைய கம்யூனிஸ்ட் அரசு இன்போசிஸுக்கு வழங்கிய வரி சலுகை குறித்து கேள்வி எழுப்பினார். ஆகவே, 2011ம் ஆண்டில் நிலத்தை இன்போசிஸ் திரும்ப அளித்துவிட்டது.
தற்போது மென்பொருள் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க மேற்கு வங்க அரசு முயன்று வருகிறது. காக்னிசண்ட், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அங்கு கால் பதித்து விட்டநிலையில் தற்போது இன்போசிஸும் இறங்கியுள்ளது.
"முந்தைய நிலத்தை நாங்கள் திரும்ப கொடுத்து விட்டோம். புதிய நிலத்தை பெற்றிருக்கிறோம்,” என்று இன்போசிஸ் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு பிரிவு தலைவர் ராம்தாஸ் காமத் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒப்பந்தத்தின்படி இப்போது திறக்கப்படும் மேம்பாட்டு மையம் ஆயிரம் எஞ்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் என்று இன்போசிஸ் கூறியுள்ளது.