இந்திய மொழிகளில் இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம்!

by SAM ASIR, Aug 14, 2018, 19:25 PM IST
இணையதளங்களின் பெயர்கள் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த மொழியில் உள்ளடக்கம் இருந்தாலும் பெயர்களை ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்து தளங்களை பார்க்க முடிகிறது. இனி அந்த நடைமுறை மாறப்போகிறது. தமிழ் மொழி இணையதளம் என்றால், பெயரையும் இனி தமிழிலேயே தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 22 மொழிகள் உள்பட பல இந்திய மொழிகளில் இணையதளங்களுக்குப் பெயர் வைக்கக்கூடிய வசதியை உருவாக்கும்படியான பணியினை ICANN - Internet Corporation for Assigned Names and Numbers என்ற பெயர்கள் மற்றும் எண்களை ஒதுக்கும் இணைய கழகமும், DNS - Internet's Domain Name System என்ற இணைய தள பெயர் முறைமை அமைப்பும் செய்து வருகின்றன.
 
 "வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஒன்பது மொழிகளுக்கான வரி வடிவங்கள் தயாராகி வருகின்றன. இந்த எழுத்துகள் இன்னும் அநேக மொழிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று  ICANN அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் சமிரன் குப்தா கூறியுள்ளார்.
 
இணையதளங்களின் பெயர்கள் அந்தந்த மொழியிலேயே அமைந்தால், ஆங்கிலம் அறியாத மக்களும் தங்கள் மொழியில் தளங்களின் பெயர்களை தட்டச்சு செய்து பார்க்க இயலும். உலக அளவில் மண்டல மொழிகளில் இணையதளங்களுக்கு பெயர் வைப்பதற்கான வரைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை வரையறுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் உள்ள மொத்த மக்களில் 52 சதவீதத்தினர் இப்போது இணையத்தை பயன்படுத்துகின்றனர். மீதம் உள்ள மண்டல மொழிகளில் இணையதளங்களுக்கு பெயர் வைக்கப்படும்போது எஞ்சியிருக்கும் 48 சதம் மக்களும் இணைய பயன்பாட்டுக்கு வருவர் என்று நம்பப்படுகிறது.
"இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களும் மொழி வல்லுநர்களும் இதற்கென உழைத்து வருகிறார்கள்," என்று குறிப்பிட்ட குப்தா, "தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய ஆறு மொழிகளுக்கான வரி வடிவங்கள் ஏற்கனவே பொதுமக்களின் கருத்துகளை பெறும்படி வெளியிடப்பட்டுள்ளன.
 
  www.icann.org/idn என்ற இணைப்பில் இந்த வரைவு முன்மொழிதல்களை யார் வேண்டுமானாலும் பார்த்து தங்கள் கருத்தினை பதிவு செய்ய இயலும். தற்போது 420 கோடியாக இருக்கும் உலக இணைய பயனர்கள் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 500 கோடியாக உயரும்," என்றும் தெரிவித்தார்.

You'r reading இந்திய மொழிகளில் இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை