கனமழை, வெள்ளம்.. கேரளாவுக்கு ரெட் அலர்ட்

Aug 15, 2018, 22:40 PM IST
கனமழை தொடரும் நிலையில், கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்துள்ளது. நீண்ட நாட்களாகியும் கனமழை குறைந்தபாடில்லை. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 
 
இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சற்று குறைந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளதால், நிரம்பியிருந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
 
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
கனமழை தொடரும் நிலையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, காசர்கோட், மலப்புரம், பாலகாடு, இடுக்கு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாழன் வரையில் சிவப்பு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 
 
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தேவையான உதவிகளை செய்வோம் என மத்திய அரசும் உறுதியளித்துள்ளது.
 
கனமழை, வெள்ளம் காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதனால் விமான சேவையும் முடங்கியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை விமான சேவைகள் கொச்சி விமான நிலையத்தில் இருக்காது என்றும் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விமான நிலைய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கனமழை, வெள்ளம்.. கேரளாவுக்கு ரெட் அலர்ட் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை