திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். அவரது உடல் 8ஆம் தேதி மெரினாவில் உள்ள அண்ணாநினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
தேசியக் கட்சி தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் சென்னை வந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், போலீசாரின் அஜாக்கிரதையால் அவரது பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான மூன்று பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.