நீட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இரு முறையாக நடத்தப்படும் எனவும் இந்த தேர்வு முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜேஈஈ, நெட் தேர்வு ஆகிய தேர்வுகள் நடக்கும் தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில், நீட் தேர்வு அடுத்தாண்டு மே மாதம் 5-ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு ஆன்லைன் முறையில் இல்லாமல் பேப்பர், பேனா அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
JEE நுழைவுத்தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 2-வது JEE நுழைவுத்தேர்வு ஏப்ரல் 7 ஆம் தேதியில் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த திடீர் அறிவிப்பு மாணவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.