மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018 ஜூலை 31 வரையுள்ள மதிப்பீட்டின்படி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுள் இந்த வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், உத்திரவாத கடிதங்கள் மற்றும் வங்கியின் ஸ்விஃப்ட் (SWIFT) பரிவர்த்தனை மூலம் 13,500 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தெரியவந்தது. அதனால் வங்கி அதன் கட்டுப்பாடுகளை பலப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பொருளாதார சேவை துறை, வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மதிப்பீடு செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழில்நுட்ப ரீதியில் 0.83 சதவீத பரிவர்த்தனைகளே தோல்வியடைந்துள்ளன. அதனடிப்படையில் இந்தியா முழுவதுமுள்ள வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆறாம் இடத்தையும், அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, இதன் மேலாண் இயக்குநராக 2015 ஆகஸ்ட் முதல் 2017 மே வரை பணியாற்றி பின்பு அலஹபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஷா அனந்தசுப்ரமணியன், அவரது பதவி காலம் முடியும் கடைசி நாளன்று மத்திய அரசினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.