புகார்களை விசாரிக்கும் அதிகாரியை நியமிப்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பல செய்திகளும், தகவல்களும், வாட்ஸ் அப் மூலம் வெகு வேகமாகப் பரவி விடுகிறது. சில நேரங்களில் வதந்திகளும் வலம் வருகின்றன.
இதனால் அப்பாவி மக்கள் உயிரை இழக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனைதொடர்ந்து, சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்காக இந்தியாவுக்கென்று ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த கோரிக்கையை நிராகரித்த வாட்ஸ் அப் நிறுவனம், குறுந்தகவல்கள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன எனக் கண்காணிப்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் என்கிரிப்ஷன் நடை முறையை வலுவற்றதாக மாற்றி விடும் என்றும் இத்தகைய தொழில்நுட்பங் கள் தனிநபர் தகவல்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்தியாவில் குறை தீர்ப்பு அலுவலரை நியமிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பதுறை, நிதித்துறை மற்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் ஆகியோர், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.