மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியில் காலியாக உள்ள இடங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறையின் இணை அமைச்சரான ஜிதேந்திரசிங் புதனன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
அதில், அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் குறித்த ஆண்டறிக்கையின்படி மொத்தம் 36 லட்சத்து 33 ஆயிரத்து 935 பணியிடங்கள் உள்ளன.
இதில் 2016-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி சுமார் 4 லட்சத்து 12 ஆயிரத்து 752 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா? என்ற மற்றொரு கேள்விக்கு, அப்படி எந்தவொரு பரிந்துரையும் அரசு பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளார்.