ரூ. 1 கோடிக்கும் அதிகமான தனிநபர் வருமானத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் 23.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் 59 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது என்று வருமானவரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், முந்தைய ஆண்டை விட 23.5 சதவிகித உயர்வுடன் 59 ஆயிரத்து 830 பேர் 1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுவதாகவும், இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டின் கோடீஸ்வரர்கள் பற்றிய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 48 ஆயிரத்து 417 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் அனைத்தும் அரசுக்குச் செலுத்தப்படும் வருமான வரியின் அடிப்படையில்தான் தெரியவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.