பாலாற்றின் குறுக்கே தடுப்பணை... இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை... கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

Sep 4, 2018, 15:12 PM IST

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Palar River

அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்பட்டு வரும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திர அரசு தொடர்ந்து மேற்கொள்வதை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகாவில் 93.கி.மீ, ஆந்திராவில் 33 கி.மீ தூரத்தில் தான் பயணிக்கின்றது. தமிழ்நாட்டில் தான் மிக அதிக தொலைவு 222 கி.மீ தூரத்தில் பயணிக்கின்றது. ஆந்திர அரசு 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி தண்ணீரைத் தேக்கி, தமிழகத்திற்குரிய தண்ணீரை கிடைக்காமல் தடுத்து வருகின்றது.

மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இன்றி நீரைத் தடுப்பதற்கான எவ்விதமான கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது என்ற முடிவை ஆந்திர அரசு தொடர்ந்து மீறி வருகின்றது. சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற இடத்தில் 0.6 டிஎம்சி தண்ணீரைத் தேக்க தடுப்பணை கட்ட 2006 ல் ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக அணைகட்டும் திட்டத்தை ஆந்திரஅரசு கைவிட்டது. மேலும் மத்திய நீர் வளத்துறை பாலாற்றில் தடுப்பணைகள் கட்டக் கூடாது என்ற ஆந்திர அரசுக்கு அறிவுறித்தியுள்ளது.

ஆனால் இவைகள் அனைத்தையும் மீறி ஆந்திர அரசு தன் மாநிலத்தில் 33. கி.மீ தூரத்திற்குள் 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் ஒரு தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தடுத்துள்ளது.

Mutharasan

வாணியம் பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே இருந்த 7 அடி உயர தடுப்பணையை 12 அடியாக உயர்த்தி கட்டி முற்றாக தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் செய்ததுடன், தமிழ்நாடு இந்துசமய அறநிலையைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கனக நாச்சியம்மன் கோவிலையும் ஆந்திரஅரசு கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் கண்டும், காணாமல் விட்டு விட்டது வேதனைக்குரியது.

இந்நிலையில், தற்போது தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் புல்லூர் அருகே கங்குத்தி பெத்தவங்கா ஊராட்சியில் பெரும்பள்ளம் பகுதி உள்ளது. இப்பகுதியையொட்டி தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வழியில் பேட்டைபள்ளம் எனும் பகுதியில் பாலாற்றில் கிளை ஆற்றின் குறுக்கே இருந்த 5 அடி உயர தடுப்பணையை 10 அடியாக உயர்த்தி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி வருகின்றது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

மேலும் பல அணைகளை கட்டவும் ஆந்திர அரசு முற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர அரசின் அத்துமீறிய, தமிழ்நாட்டிற்கு எதிரான இச்செயல்பாடு மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாலாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வர முடியாத நிலையினை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர அரசின் அத்துமீறிய செயலை தடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது உரிமையை காக்க வேண்டிய தமிழ்நாடு அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது மிகக் கடுமையான கண்டனத்திற்குரிதாகும்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் பேசி ஆந்திர அரசின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தவும், நீதிமன்றத்தில் உடன்வழக்கு தொடர்ந்து, தமிழக உரிமையை காக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

You'r reading பாலாற்றின் குறுக்கே தடுப்பணை... இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை