பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.91 பைசா, டீசல் விலை ரூ.76.98 பைசாவாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவிலான முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய பந்த், மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அதிகாலையில் பேரணி, ரயில்மறியல், கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பேருந்து சேவை பாதிக்கப்படுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை தவிர, திமுக, கம்யூனிஸ்ட் , பாமக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஐ.என்.டி.யு.சி., - தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., போன்ற தொழிற்சங்கத்தினர் பேருந்து மற்றும் ஆட்டோக்களை இயக்குவது இல்லை என முடிவு செய்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் இன்று குறைந்த அளவே பேருந்து மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி.,க்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாய கடையடைப்புக்கு மிரட்டல் விடுப்போர் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.