சான்றிதழ்கள் பெறுதல், குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் ஊழலை தடுக்கும் வகையில், வீடு தேடி சென்று பொருட்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார்.
இந்நிலையில், திருமணச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகை சேவைகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தால் போதும், வீடு தேடி சேவைகள் செய்யப்படும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம், டெல்லி அரசின் கீழ் உள்ள வருவாய் துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து துறை, குடிநீர் வாரியம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்பட 40 சேவைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.