ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் இருந்து களவாடப்பட்ட நிஜாமின் தங்க டிபன் பாக்ஸை மீட்ட காவல்துறை, 2 திருடர்களை கைது செய்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் ஆட்சி செய்த நிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் புரானி ஹவேலியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடைசி நிஜாம் பயன்படுத்திய தங்கத்தால் ஆன 5 அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தங்க டீ கப்-சாசர், தங்க ஸ்பூன் ஆகியவையும் இடம்பெற்று இருந்தது.
நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற இந்த பொருட்கள், கடந்த 4ஆம் தேதி மாயமானது. இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அருங்காட்சியகத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி வந்த கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அருங்காட்சியகத்தில் இருந்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நண்பர்களான இரண்டு கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு திருடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 30 கோடியை தாண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.