கேரளாவில் வரலாறு காணாத பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை, சரிசெய்யும் வகையில், சபரிமலையில் ரூ.25 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் பெய்த கன மழையால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும், வெள்ளப்பெருக்கால் பல சாலைகள் இடம் தெரியாமலும் போனது.
சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் சேதம் அடைந்தும், சில இடங்களில் சாலைகள் இருந்த அடையாளமே இல்லாமல் போயுள்ளது. பம்பையில் கட்டப்பட்டு இருந்த பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
நேற்று புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால், அதற்கான பூஜைகள் செய்வதற்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக பம்பையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு சிரமத்திற்கு நடுவே பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
மேலும் வரும் கார்த்திகை மாதத்திற்கு அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வர துவங்குவார்கள். ஆதலால் சபரிமலைக்கு செல்லும் பாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், "சபரிமலையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணைத்து விதமான சீரமைப்பு பணிகளையும் முழுமையாக மண்டல பூஜைகளுக்கு முன்பே முடித்து விட திட்டமிட்டுளோம்.
மேலும், அய்யப்ப பக்தர்கள் தங்கும் விடுதிகளும், மண்டபங்களும், வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. அனைத்தையும் சீரமைக்க சுமார் 25 கோடிகள் தேவைப்படும். அதற்கான திட்டமதிப்பீடு தயாரான பின் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.