செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
மத்திய அரசு உத்தரவின்படி, செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட வேண்டும் என்பது யுஜிசி - பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கை.
அதன்படி, 29ஆம் தேதி கருத்தரங்குகள், சிறப்பு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக கண்காட்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவத்தின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் யுஜிசியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “பல்கலைகழகத்தின் சுதந்திரத்தை மத்திய அரசின் நடவடிக்கை அழித்துவிடும்” என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
“இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் கபில்சிபில் கூறியுள்ளார்.
இதனிடையே சர்ஜிகல் தினத்தை கொண்டாட போவதில்லை என்றும் மேற்கு வங்க அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.