சிம்லா: இமாச்சல் பிரதேசம் மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதியில் 44 தொகுதிகளை பாஜ கைப்பற்றி, பெரும்பாண்மையுடன் வெற்றிப் பெற்றது.
இந்த தேர்தலில், பாஜ சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து போட்டியிட்ட பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணி மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சட்டமன்ற பாஜக தலைவராகவும் புதிய முதலமைச்சராகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, இமாச்சலின் 13வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று தனது அமைச்சர்களுடன் பதவி ஏற்றுக்கொண்டார். தாக்கூர் மற்றும் 10 அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.