பாத்திரத்தில் அமர்ந்து ஆற்றைக் கடந்து படிக்கும் சவால் சிறுமிகள்!

Sep 28, 2018, 19:24 PM IST

 

அசாம் மாநிலத்தில் அலுமினிய பாத்திரங்கள் உதவியுடன், குழந்தைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


பிஸ்வநாத் மாவட்டம் சூடி கிராமத்தில் ஆற்றங்கரைக்கு அப்பால் அரசு பள்ளி அமைந்துள்ளது. ஆற்றின் குறுக்கே பாலம், படகு, சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


நாள்தோறும், தோணி போன்ற பெரிய அலுமினியப் பாத்திரங்களைக்கொண்டு ஆற்றைக் கடந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். ஆபத்து என்பதை உணர்ந்தும், பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்த பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.


அலுமினியப் பாத்திரத்தின் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஜே.தாஸ் விவரிக்கையில், பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஆற்றங்கரை உள்ளது. ஆனால், ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டவில்லை. அதனால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அலுமினிய பாத்திரங்கள் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வருகின்றனர். இதற்கு முன்னர், வாழை மரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட தற்காலிகப் படகுகளைப் பயன்படுத்தினர். குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக அரசு பாலம் அமைத்து தர வேண்டும்'' என்று கூறினார்.


இந்த விவகாரம் தொடர்பாக பிஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பிரமோத் போர்தகுர் கூறுகையில், குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் காட்சியைப் பார்க்கையில் வெட்கமாக உள்ளது. இந்தப் பகுதியில் முறையான சாலை வசதிகூட அமைக்கவில்லை. ஒரு தீவில் எப்படி பள்ளியை அரசாங்கம் கட்டியது என்பது தெரியவில்லை. ஆற்றை மாணவர்கள் கடந்துசெல்ல நிச்சயம் படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அதோடு, பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கல்விக்காக உயிரை பணையம் வைத்து ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று படிக்கும் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அசாம் அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் குரலாகும்.

You'r reading பாத்திரத்தில் அமர்ந்து ஆற்றைக் கடந்து படிக்கும் சவால் சிறுமிகள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை