பிரதமர் மோடியின் சகோதரர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை குறித்து திரிபுரா மாநில முதல் அமைச்சர் பிப்லப் குமார் தேப் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
துல்லிய தாக்குதல் என்னும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் இரண்டாம் ஆண்டு விழாவின் போது திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் வங்க மொழியில் உரையாற்றினார். அப்போது, "பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு சகோதரர் மளிகை கடை நடத்துகிறார். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறார். அவர்களது தாயார் 10க்கு 12 அடி அறையில் வசிக்கிறார். இதைப் போல உலகில் வேறொரு பிரதமர் இருக்கிறாரா, சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
"பிரதமராகும் முன்பு 13 ஆண்டுகள் அவர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அவருக்கு சகோதரர்களும் சகோதரிகளும் உண்டு. வயதான தாயார் இருக்கிறார். ஆனால், அவர் பிரதமரின் மாளிகையில் தங்கவில்லை. அவரது ஒரு சகோதரர் இன்னும் ஆட்டோ ஓட்டுகிறார்..." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபுரா முதல்வர் இது போன்ற வித்தியாசமான தகவல்களை கூறுவது வழக்கமான ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதம், நீர்நிலைகளின் தண்ணீரை மறுசுழற்சி செய்வதற்காக கிராமத்தினருக்கு வாத்துகளை வழங்க இருப்பதாக பிப்லப் குமார் தேப் கூறினார்.
"வாத்துகள் நீரில் நீந்தும்போது, நீரில் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு தானாக உயரும். நீரில் ஆக்ஸிஜன் மறுசுழற்சி செய்யப்பட்டால், நீரில் வாழும் மீன்களுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். வாத்துகளின் எச்சம் மூலமாகவும் மீன்கள் பயன்பெறும். இயற்கை முறையில் ஊட்டம் பெற்று மீன்கள் வேகமாக வளரும்," என்று அதற்கக் காரணமும் கூறியிருந்தார்.
முன்பு ஒருமுறை, மகாபாரத காலத்திலேயே இந்தியர்கள், இணையம் மற்றும் செயற்கை கோள்களை பயன்படுத்தினர் என்று பிப்லப் குமார் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சொல்லுங்க சி.எம்., சொல்லுங்க...!