இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா.
மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் தலைமை நீதிபதியாக 63 வயது தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 13 மாதங்கள் அப்பதவியில் இருந்த பிறகு, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுவார்.
1953-ஆம் ஆண்டு பிறந்த தீபக் மிஸ்ரா 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். ஒடிசா உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை, விற்பனை வரி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த வழக்குகளில் தனது வாதத்திறமையை வெளிப்படுத்தியவர்.
1996 ஆம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டே மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்பட்டார். 1997ஆம் ஆண்டு இறுதியில் தீபக் மிஸ்ரா நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009, டிசம்பர் 23-ஆம் தேதி நீதிபதி மிஸ்ரா பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2010, மே 24-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணியை அவர் தொடர்ந்தார். 2011, அக்டோபர் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுக்கொண்டார்.
அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
நீதிபதி தீபக் மிஸ்ராவின் பல தீர்ப்புகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோதும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும் முக்கியமான வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகளில் பல மிகவும் பிரபலமானவை.
தில்லி நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது, சிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்தது போன்றவை தீபக் மிஸ்ராவின் முக்கிய தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை. கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஆலயத்தை பெண்களுக்கும் திறந்துவிடவேண்டும் என்பதும் நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பே.
நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களிப்பும் கொண்ட மிகவும் பிரபலமான முக்கியமான தீர்ப்புகளை பார்க்கலாம்.
24 மணி நேரத்தில் இணையத்தில் எஃப்.ஐ.ஆர் நகல்
- நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் அதனை வலைதளத்தில் பதிவேற்றவேண்டும்' என்று 2016 செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.
- தேவையில்லாமல் மக்கள் அலைகழிக்கப்படுவதை தடுப்பதற்காக இதேபோன்ற உத்தரவை நீதிபதி தீபக் மிஸ்ரா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, 2010 டிசம்பர் ஆறாம் தேதியன்று டெல்லி காவல்துறைக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை
- 2016, மே மாதம் 13-ஆம் தேதியன்று, குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என்று கூறிய உச்ச நீதிமன்ற சட்ட அமர்வில் நீதிபதி மிஸ்ராவும் ஒருவர்.
- சுப்ரமணியன் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவரின் கருத்து சுதந்திரமானது, வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை
- 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
- 2013, ஜூலை 29ஆம் தேதி இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டு அந்த மனுவை தீபக் மிஸ்ரா உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
- வாதங்கள் முடிந்தபிறகு காலை ஐந்து மணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில், 'யாகூபுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது, நீதியை ஏளனம் செய்வதற்கு ஒப்பானதாகும், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டது.
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும்
- திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதை கட்டாயமாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை
- உத்தர பிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
- உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்தபோது, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
- 2012, ஏப்ரல் 27ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த சட்ட அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதில் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் (1 அக்டோபர் 2018) ஓய்வு பெறுகிறார்.