குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் கடந்த 3 வாரங்களில் உயிரிழந்த சிக்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, சிங்கங்கள் திடீரென உயிரிழந்து வருவதால் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கிர் காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் மட்டும் 11 சிங்கங்கள் உயிரிழந்தன. இதையடுத்து சில நாட்களில் மீண்டும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன.
இதற்கிடையே, கிர் வனப்பகுதியில் நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆனால், இந்த ஏழு சிங்கங்களும் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. இதனால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்தது.
இந்நிலையில், நேற்று மேலும் இரண்டு சிங்கங்கள் இறந்துவிட்டன. இதனால், இதன் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஒவ்வாமை காரணமாக கிர் காட்டில் இருக்கும் 23 சிங்கங்கள் இறந்துள்ளன. இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. சிங்கங்கள் இறப்பு தொடர்பாக ஆய்வு நடத்த டெல்லி, புனேவில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.