நாட்டில் நிலவும் சாதி வேற்றுமையால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உயிர் வாழ்வதாக கர்நாடகா மாநில அமைச்சர் மகேஷின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணியில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி ஆட்சியின் ஆரம்பக் கல்வி துறை அமைச்சராக இருப்பவர் என் மகேஷ்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த மே மாதம் நடந்த தேர்தலின் போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் சந்திரன் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தாலும் அவ்வப்போது ஆளும் கட்சியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவராக அமைச்சர் என். மகேஷ் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவின் சாம்ராஜ் நகரில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் என்.மகேஷ், "நாட்டில் சாதி வேற்றுமை இருப்பதனாலேயே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இன்றும் நிலைத்துள்ளன."
"சாதி வேற்றுமை ஒழிந்துவிட்டால் இந்த மூன்று கட்சிகளுக்கு நாட்டில் இடம் இருக்காது. இதை காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் புரிந்துகொள்ளும் தன்மையில் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார். ஆளும் கட்சியில் உள்ள அமைச்சரின் இந்த கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.