இந்திய விமானப்படையின் 86-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. 1945ல் அரசர் ஆறாம் ஜார்ஜ் 'ராயல்' என இந்திய விமானப்படைக்கு பெயர் சூட்டினார்.
1950ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2ஆம் உலகப் போரின் போது, பர்மாவில் ஜப்பானின் முன்னேற்றத்தை தடுக்க இந்திய விமானப்படை முக்கிய கருவியாகப் செயல்பட்டது.
ஆயுதப்படை சட்டம் 1947, அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950 ஆகியவற்றால் வான்படையின் குறிக்கோள் உருவாக்கப்பட்டது. வான் எல்லையை பாதுகாப்பதே இந்தப்படையின் தலையாய கடமை.
விமானப்படை தொடங்கப்பட்டதன் 86-வது ஆண்டு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வான்படை பலத்தை பறைசாற்றும் வகையில் பாதுகாப்புத்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. விமானப்படையை சேர்ந்த ஆகாச கங்கை குழுவினர், தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களாலான பாராசூட்டில் நடுவானில் பறந்தனர். இதனைதொடர்ந்த, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜாக்குவார் , மிக்-29 மிராஜ்-2000 ,எஸ்யூ 30, எம்.கே.ஐ உள்ளிட்ட போர்விமானக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதனை பார்வையிடுவதன் மூலம், மக்களுக்கு விமானப்படையின் பலம் தெரியும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.