திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற மாநிலங்களைவிட, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவையில் முதன்மையாக இருந்து வருகிறது கேரளா மாநிலம். ஆனால், இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, கேரள காவல்துறை சமீபத்தில் குற்ற புள்ளிவிவர பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், கேரள மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 16755 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது, 2007ல் இருந்து 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் பெண்களுக்கு எதிராக 11325 பாலியல் பலாத்கார வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிராக 5430 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 1475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் 1656 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் கேரள காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜீதா பேகம் கூறுகையில், “சமூதபாயத்தின் அடிமட்ட அளவிலான விழிப்புணர்வு மட்டுமின்றி விரைவான விசாரணை, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும். குற்றம் நடந்தவுடன் தாமதமின்றி புகார் பதிவு செய்யும் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும் ” என்று அவர் வலியுறுத்தினார்.