இனி மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியாது!

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Dec 29, 2017, 19:53 PM IST

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய சட்ட முன்வடிவில் கணவர் வாய்மொழியாகவோ, கடிதம், இ-மெயில் மற்றும் கைப்பேசியின் குறுந்தகவல் உள்ளிட்டவை மூலமாகவோ முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வதையும் தடை செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை மேற்கோள்காட்டி, இஸ்லாமிய ஆண்கள், வாய்மொழியாக மூன்று முறை ‘தலாக்’ என்று தெரிவிப்பதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது ஷாய்ரா பானு, தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது கணவர் ரிஸ்வான் அகமது 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி திடீரென ஒரு கடிதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்தார்.

இதில் ஷாய்ரா பானு கடுமையான பாதிப்புக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்துதான், முத்தலாக் விவாகரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. ‘முத்தலாக்’ என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் கூட இஸ்லாமிய ஆண்கள் தலாக் கூறி விவா கரத்து அளிப்பதாக இஸ்லாமியப் பெண்கள் தங்களின் மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 மனுக்களையும் விசாரிக்கத் தொடங்கியது.

பின்னர் இவ்வழக்குகளை சீக்கிய மதத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசப், பார்சி மதத்தைச் சேர்ந்த நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன், இந்து மதத்தைச் சேர்ந்த உதய் உமேஷ் லலித், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த அமர்வு கடந்த மே 11 முதல் ‘முத்தலாக்’ வழக்குகளை விசாரித்து, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து புதிய சட்ட முன்வடிவை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு தயாரித்தது. “முத்தலாக்” என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது.

அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிப்படும். என்று இந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வரைவு மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த சட்ட முன்வடிவு, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது, அத்துடன் இதில் முறையான சட்ட இணக்கம் இல்லை என்பதால் மசோதவைத் திரும்ப பெற வேண்டும் என்று மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த ஹைதராபாத் எம்.பி. ஓவைசி எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடியதாக மசோதா இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் மூன்றாண்டு சிறைதண்டனை என்று சட்டம் கூறுகிறது. ஆனால் சிறையில் இருக்கும் கணவர்எவ்வாறு ஜீவனாம்சம் வழங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்திற்கு எதிராக, இந்த மசோதா இருப்பதால் அதனைஏற்க முடியாது என்று அதிமுக எம்பி அன்வர் ராஜா குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில், மதத்திற்கு தொடர்பில்லை” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேசெய்தியாளர்களிடம் பேசுகையில், “முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்” என்றும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மாலையில் குரல்வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியது.

You'r reading இனி மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியாது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை