ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதுவரை 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அம்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துவமனை பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் தான் அதிகளவில் ஜிகா வைரஸ் பரவியுள்ளதால் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து 61 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் கர்ப்பிணி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.