வாழ்க்கையில் விழுபவன், முயற்சியால் எழுவது சவாலாக இருந்த நிலை, தற்போது மாறிவிட்டது. இன்ஸ்டாவில் புதிதாக, ஆடம்பர பொருட்களுடன் விழுவதை ’Falling Star Challenge’ என டிரெண்டாக்கி வருகின்றனர்.
இணையத்தில், திடீரென யாரோ ஒருவர் கிளப்பும் சவால்கள், உலகளவில் காட்டுத்தீயாய் பரவுகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ் தொடங்கி, கிகி சேலஞ் வரை இப்படி பரவியவை தான்.
தற்போது, அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது ‘Falling Star Challenge’. இந்த சவால், கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தொடங்கப்பட்டது. தற்போது, உலகளவில் இளைஞர்களை மண்ணை கவ்வ வைத்து வருகிறது.
ஆடம்பர பொருட்களுடன் கீழே விழுந்து அதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதான் தற்போதைக்கு டிரெண்டாகியுள்ள புதிய சவால்.
இந்த சவால் டிரெண்டானது முதல், சொகுசு காரில் இருந்து கீழே விழுவது, சொகுசு படகு, மாடிப் படி, டென்னிஸ் மைதானத்தில் நெட்டில் இருந்து கீழே விழுவது என பல்வேறு சேட்டைகளை செய்து, இளைஞர்கள் லைக்குகளை அள்ள புதுசு புதுசாக ரூம் போட்டு யோசித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சாலையில் ஓடும் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடும் கிகி சேலஞ் பெரிய பின் விளைவுகளை செய்த நிலையில், அதனை செய்யக்கூடாது என அரசு தடுத்தது. தற்போது, அஸ்திவாரம் போட்டுள்ள இந்த புதிய சவால் எத்தனை பேரின் மூக்கு முகரையெல்லாம் உடைக்க போகிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
செய்வதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், இளைஞர்களை இதுபோன்ற போலி வசிகரங்கள் ஆட்கொள்வது மடமையின் விளைவே!