2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி மற்றும் கவுதம் காம்பீரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து, அரசின் சாதனைகளை விளக்கி அவர்களின் ஆதரவை திரட்டுவதோடு, அவர்களை வேட்பாளர்களாக களமிறக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களை பெற்று வரும் தோனி மற்றும் கவுதம் காம்பீரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக முயற்சித்து வருகிறது. தோனியை பாஜகவில் சேர்ப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழ் நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் பாஜகவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சி மேலிடம் கருதுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, மானியக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை தொடர்ந்து, மக்களுக்கும் மிக விரும்பும் தலைவர்கள், பிரபலங்களைக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.