மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாகிய நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் பொருத்தமற்ற கேள்விகளை கேட்டு சிபிஎஸ்இ பெரும் தவறு செய்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நீட் நுழைவுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளுக்கான மொழி பெயர்ப்பு, அறிவுக்கு பொருத்தமற்றதாகவும், மாணவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத வகையிலும் இருந்ததை சுட்டிக் காட்டி அந்த வினாக்களுக்கு உரிய 196 மதிப்பெண்கள் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடுத் திருந்தார்.
இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டுமென்றும், இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இரண்டு வாரகாலத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் எனவும் அதுவரையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடையை விலக்கி விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டி.கே. ரங்கராஜன் தரப்பில், கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது, இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று வாதிடப்பட்டது.
மேலும், 49 வினாக்களை நீக்கி விட்டு, மீதியுள்ள 131 வினாக்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்பு, சிபிஎஸ்இ பெருந்தவறு செய்துள்ளதாக கூறினர்.
அத்துடன், தமிழக மாணவர்களுக்கு நிவாரணம் அளித்தால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.