பாண்டேவுக்கு 25,000 ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் விதித்தது

Pandey was fined 25,000 rupees Supreme Court imposed

by SAM ASIR, Oct 25, 2018, 06:51 AM IST
திருமண வயது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கொன்றை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அதை தொடுத்த வழக்குரைஞருக்கு அபராதமும் விதித்துள்ளது.
பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் திருமணத்திற்கு 18 வயதை குறைந்த பட்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசோக் பாண்டே என்பவர் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
 
குழந்தை திருமண தடுப்புச் சட்டம், சிறப்பு திருமண சட்டம் மற்றும் இந்து திருமண சட்டம் ஆகியவை திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதை கட்டாயப்படுத்துகின்றன. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பல்வேறு விதங்களில் மறுக்கிறது. தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமையை 18 வயதில் பெறுபவர்கள், அந்த வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது காரணமற்றது, நியாயமற்றது, முறையற்றது. அது அரசியலமைப்பின் 15 பிரிவினை மீறும் செயல் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி அசோக் பாண்டே மனு தாக்கல் செய்திருந்தார்.
 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தமது தீர்ப்பில், "18 வயதில் திருமணம் செய்ய முடியாததால் பாதிப்புறும் ஆண் வழக்கு தொடரட்டும். இந்த வழக்கில் பொது நல நோக்கு இல்லை. ஆகவே, இதை தாக்கல் செய்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கிறோம். பதினெட்டு வயதில் திருமணம் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டேன் என்று யாராவது வழக்குத் தொடரும்போது, இந்தத் தொகை அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளனர்.
 
அபராதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

You'r reading பாண்டேவுக்கு 25,000 ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் விதித்தது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை