டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம், ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (45). இவருடைய மனைவி தேவி (43). இவ்களுக்கு ஸ்ரீமதி (20) என்ற மகளும், வருண்ஸ்ரீ (16) என்ற மகனும் ஆவர்.
ஸ்ரீமிதி கோவையில் உள்ள கல்லூரியில் பிஏ படித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கு விரும்பினார். இதனால், ஸ்ரீமதியின் பெற்றோர் அவரை டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்றில் சேர்த்துவிட்டுள்ளனர். ஆறு மாதமாக அங்கு படித்து வந்த ஸ்ரீமதி அருகிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து படித்து வந்தார். இவருடன் நெல்லை மாணவி ஒருவரும் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மாணவி வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியபோது, அங்கு ஸ்ரீமதி தூக்கில் தொங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஐஏஸ் பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு நெல்லை மாணவி தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி கரோல்பாக் போலீசார் விரைந்து ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீமதிக்கு அறையில் தங்கி படிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததும், இதுகுறித்து அவரது பெற்றோரிடம் பல முறை கூறி வந்ததாகவும் உடன் தங்கியிருந்த தோழிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அறையில் இருந்து போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், தான் தற்கொலை செய்துக் கொண்ட முடிவுக்கு மன்னிக்கும்படி அதில் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீமதி தற்கொலை செய்துக்கொண்டதை பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் கோவை விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். இந்நிலையில், இன்று ஸ்ரீமதியின் உடல் சத்தியமங்கலத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.