எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லியின் முக்கிய அடையாளமாக கருதப்படும் சிக்னேச்சர் பாலம் திறக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்னேச்சர் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. பிறகு, டெல்லி பொதுப்பணி துறையின் திட்டத்தின் கீழ், டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கழகம் சிக்னேச்சர் பாலத்தின் கட்டுமானப் பணியை தொடங்கியது.
கட்டுமானப் பணி உள்பட பல்வேறு காரணங்களால் பாலம் திறக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிக்னேச்சர் பாலத்தை திறந்து வைத்தனர்.
ரூ.1,518.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் பாலம் டெல்லியின் புதிய அடையாளமாக மாறியுள்ளது. இது, குதுப் மினாரின் உயரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சிக்னேச்சர் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரசல் குறைகிறது. மேலும், வாஜிராபாத் பகுதியில் இருந்து வடகிழக்கு டெல்லியில் உள்ள காஜியாபாத், பஜன்புரா, கஜூரி காஸ், யமுனா விஹார் வாயிலாக உத்தரப்பிரதேசம் மாநில எல்லை பகுதிகளுக்கும், வடக்கு டெல்லியில் உள்ள முகர்ஜி நகர் மற்றும் புராரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறைகிறது.
அதுமட்டுமல்லாமல், வெளிப்புற ரிங் ரோடு, ஷாஹ்தாரா மேம்பாலம், ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட், காஜூரி காஸ், பஜன்புரா, பழைய வாஜிராபாத் மேம்பாலம் மற்றும் புஸ்தா சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் போக்குவரத்து நெரிசல் குறைகிறது.
இதுகுறித்து, டிடீடீடிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிக்னேச்சர் பாலம் எட்டு ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் கண்ணாடி முகப்பு பொருத்தும் பணி நடைபெற்று வருவதால், தீபாவளிக்கு பிறகு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஒரு மாதத்திற்கு மட்டும் மூடப்படும். சுமார் 154 மீட்டர் உயரத்தில் பொருத்தப்படும் இந்த கண்ணாடி முகப்பின் மூலம் டெல்லி நகரத்தையே காணலாம். இதன் பயன்பாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இவ்வாறு கூறினார்.