பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீர் வழியாக ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து வைத்து டெல்லிக்கு கடத்த முயன்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லபடுகிறது. இதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆப்பிள் பழப்பெட்டிகளில் ஹெராயின் எனும் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் சுமார் 50 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.இதன் சர்வதேச மதிப்பு ரூ.200 கோடி என அதிகாரிகள் கணக்கிட்டனர்.
ஹெராயின் கடத்தல் குறித்து நடத்திய விசாரணையில், குப்வாரா மாவட்டத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், இதனை டெல்லி ஆசாத்பூர் மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.