இயற்கை பேரிடர் காலத்தில் பரவும் பொய் செய்திகள்: கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஐ.ஐ.டி.

IIT says can control Spreading false news during natural disaster

by SAM ASIR, Nov 20, 2018, 18:57 PM IST

வெள்ளம், புயல் போன்ற பேரிடர் நேரங்களில் வாட்ஸ் அப், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை பரவுவதை தடுப்பதற்கு எளிதான வழி இருப்பதாக காரக்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தினர் (Indian Institute of Technology) தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூரில் இந்திய தொழில் நுட்ப கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சப்தகிரி கோஷ் என்ற உதவி பேராசிரியரின் தலைமையின் கீழ் இயங்கும் குழுவினர், செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) பயன்படுத்தி இதற்கென ஒரு படிமுறையை (Algorithm) உருவாக்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய்திகளை யாராவது உட்கார்ந்து பார்த்து கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க இயலும். உண்மையான தகவல்களாக இருப்பின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அவற்றை தெரிவிக்க முடியும்.

இந்த படிமுறை மூலம் 90 விழுக்காடு பொய் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றும், பேரிடர் நேரங்களில் பரிமாறப்படும் டுவிட்டர் தகவல்களில் 2 விழுக்காடு மட்டுமே துல்லியமான தகவல்கள் உள்ளன. ஏனையவை பாதிக்கப்பட்டோர் மீது கரிசனை காட்டும் உணர்ச்சிகர ரகத்தை சார்ந்தவை மட்டுமே என்றும் கோஷ் கூறியுள்ளார்.

இதன் பரிசோதனை கட்டம் நேபாளத்தில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சென்னையில் 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றின்போது ஆரம்பமானது என்று கூறப்படுகிறது. சென்னை வெள்ளத்தின்போது, முதலை பண்ணையிலிருந்து முதலைகள் தப்பி வெள்ள நீரில் வருவதாக வதந்தி பரவியது. அப்போது உரிய நிர்வாகத்திடம் தகவல் பெற்று, அது வதந்தி என்று ஐஐடி மூலம் உறுதி செய்யப்பட்டது. வதந்தியை உரிய விதத்தில் கையாளவும், பரப்புவோரை அடையாளம் காணவும் இந்த செயற்கை நுண்ணறிவு படிமுறை உதவும். இயற்கை பேரிடரின்போது மட்டுமே இது உதவக்கூடும்.

இதற்கான முன்மொழிவு மைக்ரோசாஃப்ட் இந்திய ஆராய்ச்சி நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்றுக்கெள்ளப்பட்டால் மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி நிறுவனமும் கத்தார் கணினி செயல்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பேரிடருக்கு பிந்தைய மீட்பு செயல்பாடு குறித்த பணியில் பயன்படுத்துவதற்கு ஏற்ப முழுமையாக வடிவமைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading இயற்கை பேரிடர் காலத்தில் பரவும் பொய் செய்திகள்: கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஐ.ஐ.டி. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை