பள்ளி மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் மாணவர்களுக்கு மிகவும் சுமையாக தெரிவது புத்தகப்பை சுமப்பது தான். 1ம் வகுப்பு முதலே அதிக எடைக் கொண்ட புத்தகப்பையை பிஞ்சுகள் சுமக்கின்றன.
இந்தியளவில் பள்ளி மாணவர்கள் குறைந்தது 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பபையை சுமக்கின்றனர். அதாவது. அவர்களின் மொத்த உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமக்கின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பொறுத்தவரையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட முப்பருவ பாடமுறை திட்டத்திற்கு பிறகு குறைந்த எடையில் மாணவர்கள் புத்தகத்தை சுமப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், மாணவ மாணவிகளின் புத்தகப்பை இருக்க வேண்டிய அளவு, பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்றும், இவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவரி வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண் | வகுப்பு | புத்தகப்பை எடை |
1 | 1ம் வகுப்பு - 2ம் வகுப்பு | 1.5 கிலோ |
2 | 3ம் வகுப்பு - 5ம் வகுப்பு | 2-3 கிலோ |
3 | 6ம் வகுப்பு & 7ம் வகுப்பு | 4 கிலோ |
4 | 8ம் வகுப்பு & 9ம் வகுப்பு | 4.5 கிலோ |
5 | 10ம் வகுப்பு | 5 கிலோ |