மத்தியபிரதேசம், மிசோரம் சட்டமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Madhya Pradesh and Mizoram Assembly Election Voting started with strong security

by Isaivaani, Nov 28, 2018, 08:05 AM IST

மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

அதன்படி, கடந்த 12 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இரண்டு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் முனைப்போடு, முக்கிய கட்சிகள் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளும், மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளும் உள்ளன. இரு மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு, இருமாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, இன்று மாலை மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

தொடர்ந்து வரும் 7ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலும் முடிவடைந்த பிறகு, 5 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

You'r reading மத்தியபிரதேசம், மிசோரம் சட்டமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை