சென்னை: தமிழகம் முழுவதும் 8 நாட்களாக தொடர்ந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 8வது நாளாக வேலைநிறுத்தம் போராட்டம் இன்றும் நீடித்து வந்த நிலையில், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், போராட்டம் நடத்திய காலத்திற்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும், வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவிக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும் தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம் வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
இந்நிலையில், இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவதராக நியமித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், நீண்ட ஆலேசனைக்கு பிறகு தொழிற்சங்கத்தினர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சிஐடியு தலைவர் டி.சவுந்தரராஜன் கூறுகையில், “2.57 காரணி ஊதிய உயர்வை மத்தியஸ்தரிடம் வலியுறுத்துவோம். பொது மக்கள் நலன் கருதி ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகிறோம். நாளை காலை முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்புவார்கள். அதன் முதல், வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்” என்றார்.