டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை இன்று காலை சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது.
இதற்காக திமுக சார்பில் பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.
இதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி டெல்லி சென்றார். அங்கு, டெல்லி அக்பர் சாலையில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்தார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் வழங்கி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை மு.க.ஸ்டாலின் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது உடன் திமுக எம்.பி., கனிமொழியும் இருந்தார்.
தொடர்ந்து, இன்று மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.