5 மாநில தேர்தல் முடிவுகள்- புத்துணர்ச்சி பெறும் காங்கிரஸ்!

5 State Election Results! Rejuvenating Congress!

by Mathivanan, Dec 11, 2018, 13:49 PM IST

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா , மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் புத்துணர்வு பெற்றுள்ளது. இந்த முடிகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பா.ஜ.க. தரப்பு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

முக்கியமாக ராஜஸ்தான், ம.பி,சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது. முழுவதும் இந்தி மொழிபேசும் மக்கள் அடங்கிய இந்த மாநிலங்களில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

தற்போதைய நிலவரப்படி சத்தீஸ்கரில் நான்கில் மூன்று பங்குக்கும் மேல் இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்த ராமன் சிங் தலைமையிலான பா.ஜ. அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் கிட்டத்தட்ட ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரஸ் பெரும்பான்மையை எட்டிவிடும் என்ற நிலை உள்ளது. வசுந்தர ராஜே தலைமையிலான பா.ஜ. அரசு இங்கும் ஆட்சியை பறிகொடுக்கிறது.

மத்தியப் பிரதேசத்திலோ காங். மற்றும் பா.ஜ.இடையே சம அளவுக்கு வெற்றி கிடைத்து இழுபறி நீடித்தாலும் மாயாவதி தயவில் காங். ஆட்சியை கைப்பற்றும் என்ற நிலை உள்ளது. மொத்தத்தில் இந்த 3 மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இந்த முடிவுகள் அந்தந்த மாநிலங்களின் அரசுக்கு எதிராக விழுந்த வாக்குகளா? அல்லது மத்தியில் பிரதமர் மோடி மீதான எதிர்ப்பு வாக்குகளா? என்ற விவாதம் சூடு பறக்கிறது.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து பெரும் வெற்றியை சுவைத்துள்ளார். இங்கு சந்திரபாபு நாயுடுவுடன் காங். கூட்டணி அமைத்ததை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

காங். தனித்து நின்றிருந்தால் கூட இந்த மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது. சின்னஞ் சிறிய மாநிலமான மிசோரமில் காங். ஆட்சியை பறிகொடுத்து மாநிலக் கட்சியிடம் படு தோல்வியை சந்தித்துள்ளது என்றாலும் அது தேசிய அளவில் பெரிதாக விவாதத்தை ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அனைவரது எதிர்பார்ப்பும் ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்தே அனைவரது கவனமும் இருந்தது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்ற ஓராண்டில் கிடைத்த இந்த வெற்றி காங்கிரசுக்கு பெரும் புத்துணர்ச்சியை தற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இந்த முடிவுகளுக்கு பிறகு மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி உருவாக்க காங்கிரசுக்கு புது தெம்பு கிடைத்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

You'r reading 5 மாநில தேர்தல் முடிவுகள்- புத்துணர்ச்சி பெறும் காங்கிரஸ்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை